Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்: குமாரசாமி வலியுறுத்தல்

மே 19, 2021 06:09

பெங்களூரு: கொரோனா பரவல் தொடர்பாக துமகூரு மாவட்ட ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குமாரசாமி கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வருகிற 24-ந் தேதியுடன்
நிறைவடைகிறது. அதனால் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். ஊரடங்கை நீட்டிக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும்.
அதனால் ஊரடங்கை நீட்டிப்பது நல்லது.

அத்துடன் வறுமையில் வாடும் தொழிலாளிகள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து
வருவதாக அரசு சொல்கிறது. ஆனால் வைரஸ் பரவல் குறையவில்லை. மாறாக பரிசோதனைகளின் எண்ணிக்கை தான் குறைந்துள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதுடன் இறப்புகளும் உயரும் ஆபத்து உள்ளது. கொரோனா பரவலை குறைத்துக்காட்டி மாநில அரசு
தவறுகளை மூடிமறைக்க முயற்சி செய்கிறது. மக்களின் கவனத்தை திசை திருப்பி அரசு பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறது. செய்த தவறை மீண்டும்
செய்யக்கூடாது.

மாநில அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. புதிதாக வரும் நோயாளிகள் படுக்கை கிடைக்காமல் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதை அரசு கவனிக்க வேண்டும்.

மக்களின் வாழ்க்கையோடு அரசு விளையாடக்கூடாது. கொரோனா விஷயத்தில் காங்கிரஸ் சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.

தலைப்புச்செய்திகள்