Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவின் பெயரை கெடுக்க காங்கிரஸ் விரும்புகிறது - பா.ஜ.க. பாய்ச்சல்

மே 19, 2021 06:18

புதுடெல்லி: கொரோனா தொற்று பிரச்சினையில், இந்தியாவின் பெயரையும், பிரதமர் மோடியின் நல்ல பெயரையும் கெடுக்க காங்கிரஸ் விரும்புவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டி உள்ளது. புதிய வகை கொரோனா பற்றி குறிப்பிடுகிறபோதெல்லாம் இந்தியா திரிபு என்றோ, மோடி திரிபு என்றோ சமூக ஊடக தன்னார்வலர்கள் குறிப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தி இருப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது.

இதற்காக காங்கிரஸ் கட்சியையும், அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் செய்தி
தொடர்பாளர் சம்பித் பத்ரா டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறி இருப்பதாவது:- காங்கிரஸ் கட்சி தன் சமூக ஊடக தன்னார்வலர்களை புதிய வகை கொரோனாவை மோடி திரிபு அல்லது இந்தியா திரிபு என கூறுமாறு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயை பிரதமர் மோடியின் நல்ல பெயரை அழிக்க ராகுல்காந்தி பயன்படுத்த விரும்புகிறார். காங்கிரஸ் தொண்டர்கள் உருமாறிய
கொரோனாவை மோடி திரிபு என்று அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய வகை கொரோனா, இந்தியா கொரோனா என்று அழைக்கப்பட மாட்டாது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படி
அழைக்கப்பட விரும்புகிறது. எதிர்க்கட்சி தனது அரசியலுக்காக இந்தியாவின் பெயரை கெடுக்க தயாராகி விட்டது.

கும்ப மேளாவை 'அதிவேகமாக கொரோனாவை பரப்பும் கும்ப மேளா (‘சூப்பர் ஸ்பிரெடர் கும்ப்’) என்ற அழைக்கவும் காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி உறுதியாக மறுத்துள்ளது.

இதுபற்றி அந்தக் கட்சியின் ஆராய்ச்சித்துறை தலைவர் ராஜீவ் கவுடா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

கோவிட்-19-ன் தவறான நிர்வாகம் குறித்து பா.ஜ.க. ஒரு போலியான ஆவணத்தை பரப்பி, அதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சித்துறை மீது பழி போட்டுள்ளது.
பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் சம்பித் பத்ராவுக்கு எதிராக நாங்கள் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்போகிறோம். கொரோனாவால் நாடு பேரழிவுக்கு
ஆளாகிறபோது, அதற்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக பா.ஜ.க. வெட்கமின்றி மோசடிகளை உருவாக்குகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்