Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆரணியில் கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு தற்காலிக கூடாரத்தில் சிகிச்சை அளித்த கிளினிக்கிற்கு ‘சீல்’

மே 20, 2021 06:38

திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்டம் ஆரணி நகரில் பழைய பேருந்து நிலையம் எதிரில் தனியார் கிளினிக் இயங்கி வருகின்றது. இங்கு, அரசின் முறையான அனுமதி பெறாமல் பெண் மருத்துவர் ஒருவர் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். மேலும், அந்த தனியார் கிளினிக்கில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. கிளினிக்கின் எதிரே உள்ள காலி இடத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு படுக்கை அமைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

ஆரணி நகரைச் சுற்றியுள்ள பகுதியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் ஆரணி அருகேயுள்ள தச்சூர் பொறியியல் கல்லூரியில் செயல்படும் கரோனாசிகிச்சை வார்டிலும் பாதிக்கப் பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுக்கை வசதிகள் இல்லாததால் இந்த வாய்ப்பை பயன்படுத்திய பெண் மருத்துவரின் கிளினிக்கில் 10-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அரசின் முறையான அனுமதி இல்லாமல் இயங்கிவரும் கிளினிக் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கண்ணகி தலைமையிலான குழுவினர் காவல் துறை பாதுகாப்புடன் நேற்று சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டதுடன் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள தற்காலிக கூடாரத்தில் சுமார் 20 படுக்கை வசதிகளையும் மற்றொரு கிடங்கு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட படுக்கை களையும் தயார் செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அரசின் உரிய அனுமதி பெறாமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகக்கூறி அந்த கிளீனிக்கிற்கு ‘சீல்’ வைத்தனர்.

இது தொடர்பாக இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) டாக்டர் கண்ணகி செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு போதுமான வசதிகள் உள்ளன. ஆனால், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கிய இந்த கிளினிக்கில் எந்த படுக்கை வசதியும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக் குநரிடமும், அரசிடமும் எந்த முன் அனுமதியும் பெறாமல் கரோனா நோயாளிகளுக்கு சிகச்சை அளிப்பதாக புகார் வந்தது.

அதன்பேரில் இங்கு ஆய்வு செய்ததில் 11 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதில், மூன்று பேருக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் 2 பேரை செய்யாறுக்கும், ஒருவரை தி.மலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள் ளோம். மற்றவர்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்’’ என தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்