Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொறுப்பற்ற கருத்துகளால் நட்புறவு பாதிக்கும்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெய்சங்கர் கண்டனம்

மே 20, 2021 06:42

புதுடெல்லி: டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ‘‘சிங்கப்பூரில் ஒரு புதிய உருமாறிய கொரோனா உருவாகியுள்ளது. அது குழந்தைகளுக்கு ஆபத்தானது. எனவே, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகளை மோடி அரசு உடனே நிறுத்த வேண்டும்’’ என்று அவர் கூறியிருந்தார்.

அவரது கருத்து, இந்தியா-சிங்கப்பூர் உறவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூருக்கான இந்திய தூதரை சிங்கப்பூர் அரசு நேரில் அழைத்தது. அரவிந்த்
கெஜ்ரிவாலின் கருத்துகளுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

அதற்கு இந்திய தூதர், ‘‘உருமாறிய கொரோனா பற்றியோ, சிவில் விமான போக்குவரத்து கொள்கை பற்றியோ அறிவிப்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு
அதிகாரம் இல்லை’’ என்று விளக்கம் அளித்தார்.

மேலும், சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘சிங்கப்பூர் உருமாறிய கொரோனா என்ற ஒன்றே கிடையாது. அரசியல்வாதிகள் உண்மையை உணர்ந்து பேசவேண்டும்’’ என்றார்.

இந்தநிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் தனது ‘டுவிட்டர்’
பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவும், சிங்கப்பூரும் திடமான கூட்டாளிகளாக உள்ளன. இந்தியாவுக்கு ஆக்சிஜனையும், இதர தளவாடங்களையும்
சிங்கப்பூர் அளித்தது. இதற்காக தனது ராணுவ விமானத்தை பயன்படுத்திய சிங்கப்பூரின் செயல், நமது உறவின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

இத்தகைய சூழ்நிலையில், நன்றாக தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் தெரிவிக்கும் பொறுப்பற்ற கருத்துகள், இந்த நீண்டகால நட்புறவில் சேதத்தை ஏற்படுத்தும். டெல்லி முதல்-மந்திரி இந்தியாவின் பிரதிநிதியாக பேசவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.

மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி, ‘‘இந்தியா-சிங்கப்பூர் இடையே விமான சேவைகளே இல்லை. அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ திட்டப்படி சில விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. அப்படி வருபவர்கள் நமது இந்தியர்கள்தான்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதே சமயத்தில், மத்திய அரசின் கண்டனங்களுக்கு டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசும், பா.ஜனதாவும் கூறுவதை பார்த்தால், அவர்கள் சிங்கப்பூரில் தங்களது கவுரவத்தை பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். இ்ந்தியாவில் உள்ள குழந்தைகளை பற்றி கவலைப்படவில்லை. மலிவான அரசியல் நடத்துகிறார்கள்.

இப்படித்தான் லண்டன் உருமாறிய கொரோனா பற்றி விஞ்ஞானிகளும், டாக்டர்களும் உஷார்படுத்தியபோது மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அதுதான் பெருமளவிலான கொரோனா மரணங்களுக்கு காரணமாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்