Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆம்புலன்சில் கலெக்டர் அலுவலகம் வந்த கொரோனா நோயாளி- அலுவலர்கள் ஓட்டம்

மே 22, 2021 06:06

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பகலில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் நோயாளி ஒருவர் படுத்திருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் கலெக்டர் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தவர்களிடம், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு பதிவு செய்யும் இடம் எங்குள்ளது? என்று கேட்டார். அங்கிருந்தவர்கள் அந்த இடத்தை காட்டினார்கள்.

பின்னர் ஆம்புலன்சில் உள்ளவர் யார்? என்ற விசாரித்தனர். அப்போது, அதில் இருப்பது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளி என டிரைவர்
தெரிவித்தார். இதை கேட்டதும் அங்கிருந்தவர்களும், அலுவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் அங்கு வந்து ஆம்புலன்ஸ் டிரைவரிடம், நோயாளியிடமும் விசாரித்தார்.

அப்போது, ஆம்புலன்சில் இருந்த நோயாளி திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்குள்ளான அவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. அவர் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார். ஆனால் காப்பீட்டு திட்டத்தில் அவர் பதிவு செய்யவில்லை.

இதை தொடர்ந்து அவரது உறவினர் ஒருவர், சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான அலுவலகத்தை அணுகி, அங்குள்ள அலுவலரிடம் கேட்டதற்கு பாதிப்புக்குள்ளானவரை நேரில் அழைத்து வரும்படி தெரிவித்தார்களாம். இதனை தொடர்ந்து அவரை ஆக்சிஜன் வசதியுள்ள
ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு திட்ட அலுவலகத்திற்கு அழைத்து வந்ததும்
தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பாதிப்புக்குள்ளானவரை உடனடியாக ஏற்கனவே சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி கலெக்டர் தெரிவித்தார். மேலும் அங்கிருந்த காப்பீடு திட்ட அதிகாரிகளிடம் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு காப்பீடு அட்டை தேவைப்பட்டால் உரிய ஆதாரங்களை பெற்றுகொண்டு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் நோயாளிகளை அழைத்துவரச் சொல்லி அலைக்கழிக்கக்கூடாது என கண்டித்தார்.
 

தலைப்புச்செய்திகள்