Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

மே 22, 2021 06:59

புதுடெல்லி: நாட்டின் பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா நோயாளிகளை மியூக்கோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் மிரட்டி வருகிறது. இந்நிலையில், இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் ‘ஆம்போடெரிசின்-பி’ மருந்துக்கு பற்றாக்குறை உள்ளது. எனவே, இறக்குமதியின் மூலமாகவும், உள்நாட்டு தயாரிப்பின் மூலமாகவும் கருப்பு பூஞ்சை மருந்து இருப்பை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய சுகாதார அமைச்சகம் இறங்கியுள்ளது.

அந்த அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இந்த மே மாதத்தில் 3 லட்சத்து 63 ஆயிரம் கருப்பு பூஞ்சை மருந்து குப்பிகள் இறக்குமதியின் மூலம் நாட்டில் இதன் மொத்த இருப்பு 5 லட்சத்து 26 ஆயிரத்து 752 ஆக இருக்கும். வருகிற ஜூன் மாதத்தில், உள்நாட்டு உற்பத்தியுடன், 3 லட்சத்து 15 ஆயிரம் குப்பிகள் இறக்குமதியையும் சேர்த்து, நாட்டில் இதன் இருப்பு 5 லட்சத்து 70 ஆயிரத்து 114 ஆக அதிகரிக்கும்.

உள்நாட்டில் இதன் உற்பத்தியை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்துவதற்கு மருந்தியல் துறை, வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து சுகாதார அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் ஏற்கனவே 5 நிறுவனங்கள் கருப்பு பூஞ்சை மருந்தை உற்பத்தி செய்துவரும் நிலையில், ஒரு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இம்மருந்தை இறக்குமதி செய்துவருகிறது. இந்நிலையில் மேலும் 5 நிறுவனங்கள் கருப்பு பூஞ்சை மருந்தை உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை முதல்மாதந்தோறும் ஒரு  லட்சத்து 11 ஆயிரம் குப்பிகள் வீதம் இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும். ஆனால், இந்நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவு உற்பத்தியை ஜூன் மாத்திலேயே தொடங்குவதற்கு சுகாதார அமைச்சகமும், மருந்தியல் துறையும் முயற்சி மேற்கொள்ளும்.

அதேநேரம் ‘ஆம்போடெரிசின்-பி’ மருந்துடன், கருப்பு பூஞ்சைக்கான வேறுமருந்துகளையும் வெளிநாடுகளில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்ய நடவடிக்கைஎடுக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்