Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிகிச்சைக்கு பயந்து 6 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்

மே 23, 2021 05:00

வண்டலூர்: வண்டலூர் அருகே சிகிச்சைக்கு பயந்து 6 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடிவிட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் 1700 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெறுகிறது. இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி கட்டிட வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 33 தொழிலாளிகளையும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கீரப்பாக்கத்திற்கு ஆம்புலன்சுடன் சென்றனர்.

33 கொரோனா தொற்று பாதித்த நபர்களில் 6 பேர் கிகிச்சைக்கு வரமறுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி்த்தனர். தப்பியோடிய 6 கொரோனா நோயாளிகளை உடனடியாக பிடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகத்திற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் தப்பி ஓடிய வடமாநிலத்தை சேர்ந்த 6 கொரோனா நோயாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்