Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பங்களாவிலேயே தொடர்ந்து வசிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி

மே 23, 2021 01:08

சென்னை: சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கான அரசு பங்களாக்கள் உள்ளன. இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாக்களில் குடியேற இருக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து இதுவரை அங்கு குடியிருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் அங்கிருந்து காலி செய்துவிட்டனர். மீதமுள்ள அமைச்சர்களும் காலி செய்ய இருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அரசு பங்களாவில் புனரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
 
இந்தநிலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ‘செவ்வந்தி’ அரசு பங்களாவில் வசித்து வரும் முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி
தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தொடர்ந்து அதே பங்களாவில் வசிக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு, அதே பங்களாவிலேயே தொடர்ந்து வசித்துக்கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது.

அதேபோல தனது தம்பி மறைவு காரணமாக, குறிப்பிட்ட காலம் அரசு பங்களாவில் தங்கிக்கொள்ள முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கால
அவகாசம் கேட்டிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று ஓ.பன்னீர்செல்வம் வீட்டை காலி செய்ய தமிழக அரசு காலஅவகாசம் வழங்கி இருக்கிறது.

தலைப்புச்செய்திகள்