Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் மாவட்டத்தில் 544 பேருக்கு தொற்று - கொரோனாவுக்கு ஒரே நாளில் 31 பேர் பலி

மே 24, 2021 11:23

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 31 பேர் ஒரேநாளில் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 595 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 544 பேருக்கு தொற்று உறுதியானது. வேலூர் மாநகராட்சி பகுதியில் சுமார் 300 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா பாதித்த 544 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 161 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 680 பேர் குணமடைந்துள்ளனர். 601 பேர் உயிரிழந்தனர். 3,880 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா 2-வது அலை பாதிப்பினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகிறார்கள். இதுவரை 601 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் 15 பேர் இறந்து போனார்கள்.

இந்த நிலையில் நேற்று அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 3 பேர், தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் என்று மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் தமிழக அரசால் தினமும் மாவட்ட வாரியாக வெளியிடப்படும் கொரோனா பாதிப்பு, இறப்பு, சிகிச்சை பெறும் நபர்களின் தகவலில் வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 31 பேர் கொரோனாவுக்கு இறந்து போனதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் கொரோனா தொற்று உயிரிழப்பும், தமிழக அரசின் தொற்று உயிரிழப்பு தகவலும் தினமும் மாறுபட்டதாக காணப்படுகிறது. இந்த குழப்பத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்