Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் இறந்தவரின் நகை, பணம், ஸ்மார்ட்போன் ஆகிவற்றை ஊழியர்கள் திருடியதாக குற்றச்சாட்டு

மே 25, 2021 05:55

கோவை. மே. 25 -கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா காரணமாக உயிரிழந்த நபரின் நகை, பணம், ஸ்மார்ட்போன் ஆகிவற்றை ஊழியர்கள் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டி உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள் கிடைப்பது இல்லை. எனவே நோயாளிகள் பலர் ஆம்புலன்சில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா காரணமாக உயிரிழக்கும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

தினமும் 70 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கின்றனர். இவர்களது உடல்களை வைக்கிற மருத்துவமனை பிணவறையில் இடம் இல்லை. அதனால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பிண அறையில் வைக்கப் படுகின்றன. இந்த நிலையில் பிணவறைக்கு கொண்டு செல்லப்படும் உடல்களில் இருந்து நகை, பணம் ஆகியவற்றை ஊழியர்கள் திருடுவதாக புகார் எழுந்துள்ளது. 

கொரோனா நோயாளி ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கூட தொடுவதில்லை. ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் அவர்களை தொட்டு தடவி மோதிரம், செயின், வளையல், கம்மல் உள்ளிட்ட நகைகளை திருடி விடுகின்றன என புகார் எழுந்துள்ளது. கோவை உருமண்டம்பலயம் பொன்விழா நகர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் 40, என்ற டாஸ்மாக் ஊழியர், இவர் கொரோனா காரணமாக 2 நாட்கள் முன்பு அதிகாலையில் உயிரிழந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும் போது கைகளில் மோதிரம் அணிந்து இருந்தார். பாக்கெட்டில் பர்ஸ், செல்போன் ஆகியவை வைத்திருந்த அவர் இறந்த பின்னர் உடல் உறவினரிடம் காண்பிக்கப்பட்டது. 

அப்போது அவர் கைகளில் இருந்த மோதிரம் காணவில்லை. பர்ஸ் செல்போன் ஆதார் அட்டை ஆகியவையும் காணவில்லை. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டனர். இது பற்றி இளங்கோவன் குடும்பத்தினர் மருத்துவமனை டீன் அறைக்கு சென்று புகார் தெரிவித்தனர். தொடர்ந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது பற்றி மருத்துவமனையில் மருத்துவ இருப்பிட அதிகாரி பொன்முடி கூறுகையில், அந்த நபருடன் யார் யார் இருந்தார்கள் என தெரியவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வலியுறுத்தி உள்ளேன். நாங்களும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

தலைப்புச்செய்திகள்