Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா நோயாளிகள் யாருக்கும் இனி வீட்டு தனிமை கிடையாது - ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்க அரசு உத்தரவு

மே 26, 2021 10:05

மும்பை: மராட்டியத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் யாருக்கும் இனி வீட்டு தனிமை கிடையாது, அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா முதலாவது அலையில் இருந்து மீள்வதற்குள் மராட்டியத்தை 2-வது அலையின் கருமேகம் சூழ்ந்து, கொத்து கொத்தாக பலர் தொற்றுக்கு ஆளானார்கள்.

மாநிலம் முழுவதும் தினசரி தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து, 70 ஆயிரத்தை நெருங்கியது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தொட்டது. இதனால் மூச்சு விட முடியாமல் தவித்த கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்கவில்லை. படுக்கை கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் பல நோயாளிகள் உயிரிழக்க நேர்ந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம்(ஏப்ரல்) 5-ந் தேதி முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கொள்ளை நோயான கொரோனாவின் தாக்கம் தணிய தொடங்கியது. தற்போது தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கு கீ்ழ் வந்துள்ளது. நேற்று முன்தினம் 22 ஆயிரத்து 122 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மாநில தலைநகரான மும்பையிலும் பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. அங்கு தினசரி 1,000-க்கும் சற்று அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 3¼ லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் வருகிற 1-ந் தேதி முதல் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து நேற்று மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டியத்தில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் தானே, புனே, சத்தாரா, சிந்துதுர்க், ரத்னகிரி, உஸ்மனாபாத், பீட், ராய்காட், ஹிங்கோலி, அகோலா, அமராவதி, கோலாப்பூர், சாங்கிலி, கட்சிரோலி, வார்தா, நாசிக், அமகது நகர், லாத்தூர் ஆகிய 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சராசரியை விட அதிகமாகவே உள்ளது. வழக்கமாக லேசான அறிகுறி, அறிகுறியற்ற கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் இனி மேற்கண்ட மாவட்டங்களில் கொரோனா கண்டறியப்படும் நோயாளிகள் யாருக்கும் வீட்டு தனிமை கிடையாது. அவர்கள் நேரடியாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக கூடுதல் சிகிச்சை மையங்களை உருவாக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் தொற்று பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்