Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் - யோகி ஆதித்ய நாத் தொடங்கி வைத்தார்

மே 26, 2021 10:12

வாரணாசி: உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கங்கை ஆற்றில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை வீசிய துயர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கங்கை நதியில் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை பணிக்கு உட்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிபுணர்கள் இதை கண்காணிக்கிறார்கள்.

பிரதமர் மோடி தான் வெற்றி பெற்ற உத்தரபிரதேச தொகுதியில் தங்கியுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் ஷிவ்பூரில் தடுப்பூசி பணிளை கள ஆய்வு செய்தார். பிரபல பாடகா் சன்னுலால் மிஷ்ராவின் மகள் கொரோனாவால் பலியான நிகழ்வுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து மிர்சாபூரிலும் ஆய்வு நடத்தினார். அங்கு அவர் ஆய்வு நடத்துவது இது 2-வது முறை.

நேற்றைய ஆய்வுப் பணியின்போது, கங்கையில் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுவதை கண்காணிக்கும் வகையில் ஆளில்லா குட்டி விமானங்களை (டிரோன்) பயன்படுத்தும் திட்டத்தையும் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். டிரோன்கள், தனியே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பக்கூடியது. இந்த டிரோன்களை கொண்டு நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளின் சுகாதார பணிகளை கண்காணிக்கவும் உள்ளதாக தெரிவித்தனர். ஆய்வின்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கிறதா, மக்களின் ஆதரவு எப்படி உள்ளது, உணவு மற்றும் பொருட்கள் வினியோகம் எப்படி நடக்கிறது என்பது பற்றி அதிகாரிகளிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார். தேவையான நகரங்களில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தி, நோய் பரவலை கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்