Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

பிப்ரவரி 01, 2019 02:57

சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மத்திய அரசு தமிழகத்தில் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை திணிக்க முயற்சித்த போதே இத்திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொது மக்களும் போராடினார்கள்.  

இப்போது மத்திய அரசு, திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசல் கிராமத்தை மையமாகக் கொண்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி கொடுத்து செயல்பாட்டுக்கு வந்தால் டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்களும், நீர் நிலைகளும் மாசடைந்து அப்பகுதிகளில் விவசாயிகள், பொது மக்கள் என அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். 

இந்நிலையில் திருக்காரவாசல் கிராமத்தில் இத்திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், பெண்கள் அதிக அளவில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை காவல்துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்தை எதிர்க்கும் போராட்டக்காரர்களை எக்காரணத்திற்காகவும் கைது செய்யக்கூடாது.  

அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கட்டாயப்படுத்தி கொண்டுவர முயற்சிப்பதை கைவிட வேண்டும். இத்திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க தமிழக அரசு ஆதரவு அளிக்கக்கூடாது. இவ்வாறு கூறியுள்ளார். 
 

தலைப்புச்செய்திகள்