Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சூரிய சக்தியை பயன்படுத்த விதிகள் மாற்றப்படுமா? - சமூக, சூரிய ஆற்றல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

மே 26, 2021 11:32

மக்களை அச்சுறுத்தும் கரோனாவிலிருந்து மீட்க தமிழக அரசு மிகக் கடினமாகப் பாடுபட்டு வருகிறது. இந்த நேரத்தில் மற்றொரு பேரிடரையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் அறிய வேண்டியது அவசியமாகும்.

புவி வெப்பமடைவது என்பது இன்று ஒரு மிக முக்கியமான விளைவாக உலகம் முழுவதும் பேசப்படுகிறது. தமிழகத்தில் புவி வெப்பமடைவதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் மிக அதிகம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மேலும் பல பெரிய பெரிய புயல்கள் எதிர்காலத்தில் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறார்கள்.

புவி வெப்பமடைவதைத் தடுக்கக்கூடிய முக்கியமானதாக இருப்பது சூரிய ஆற்றல். தமிழகத்தில் மிக அதிகமான சூரிய ஆற்றலும் குறைந்த அளவு மழையும் கிடைப்பதால் இங்கு சூரிய மின்சாரம் அதிக அளவு பெறப்படுகிறது. ஆனால், சூரிய ஆற்றல் பயன்பாடு தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மிக மோசமாக உள்ளது.

தமிழக மின் வாரியத்தில் உள்ள சில மூத்த அதிகாரிகளின் தவறான கணிப்பால் சூரிய மின் ஆற்றலானது மின் வாரியத்தின் வருமானத்தைக் குறைத்துவிடும் என்ற எண்ணத்தில் சூரிய ஆற்றலின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக உள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மின் ஆற்றல் நிலையத்தை பெரிய தொழிற்சாலைகளில் நிறுவ மின் வாரியம் தடை விதித்தது. தடையை எதிர்த்து பலர் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிட்டனர். ஆனால், மின் வாரியம் போட்ட சட்டம் தவறானது, அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று கூறி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதைத் தள்ளுபடி செய்தது.

அதேநேரம், புதிதாக கொடுக்கக் கூடிய விண்ணப்பங்களுக்கு எந்த ஒரு காரணத்தையும் கூறாமல் மின் வாரியம் சூரிய மின் கூரை நிறுவுவதை நிறுத்தி வைத்துள்ளது. கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன. இது சம்பந்தமான ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுகளுக்கும் மின் வாரியம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மக்கள் சூரிய மின் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு 30 சதவீத மானியத்துடன் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு தமிழ்நாடு எரிசக்தி முகமைக்கு வழங்கப்பட்டது. ஆனால், இன்று வரை அந்தத் திட்டத்தில் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.

சூரிய மின் ஆற்றலைப் பயன்படுத்தும் முறையில் நெட் மீட்டர் என்ற எளிமையான, லாபகரமான முறையை தமிழ்நாடு இதுவரை ஏற்காமல் உள்ளது. கேரளாவில் 1000 கிலோவாட் அளவுக்குக்கூட இந்த நெட் மீட்டர் முறையில் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்த முடியும். ஆனால் தமிழ்நாட்டில் வீடுகளிலோ, தொழிற்சாலைகளிலோ இந்த முறையை பயன்படுத்தாமல் உள்ளனர்.

இது தமிழகத்தில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதில் ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தற்போதுள்ள புதிய அரசின் தலைமையானது மக்களின் வாழ்வாதாரம், மக்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் மற்றும் சூரிய ஆற்றல்களை அதிக அளவு பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு விதிகளை மாற்றி ஊக்குவிக்க வேண்டும் என சமூக மற்றும் சூரிய ஆற்றல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மின் வாரியத்தின் வருமானத்தைக் குறைத்துவிடும் என்று சூரிய ஆற்றல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்