Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிராம அளவில் கொரோனாத் தொற்றைக் கண்காணிக்க வி.ஏ.ஓ.க்களைப் பொறுப்பாக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

மே 27, 2021 07:39

திருவாரூர்: கிராம அளவில் கரோனாத் தொற்றுப் பரவாமல் இருக்க கிராம நிர்வாக அதிகாரிகளைப் பொறுப்பாக்கி, கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்திட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சேவை அமைப்பின் தலைவர் ஸ்ரீவாஞ்சியம் ஈஎம்.ஏ.ரஹீம் கூறியதாவது: 

தற்போது கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் அதிக தொற்றுப் பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில், கொத்துக் கொத்தாக ஒவ்வொரு கிராமத்திலும் 20 பேருக்கு மேல் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது எவ்வாறு ஏற்பட்டது என்று விசாரித்த வகையில், அரசு அறிவுரையை மீறி, சில கிராமங்களில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது. அதேபோல சில கிராமங்களில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. 

கிராமங்களில் இதேபோல் நடைபெறும் நிகழ்ச்சிகளில், கொரோனாத் தொற்றின் அபாயத்தை உணராமல் கிராம மக்களும், உறவினர்களும் உணர்ச்சிவசத்தில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் கூட்டமாகக் கலந்து கொண்டதன் விளைவாகவே, அந்தந்த கிராமங்களில் 20 பேருக்கு மேற்பட்டவர்கள் கரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவருகிறது.

எனவே அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைக் கிராம மக்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இவ்வாறு கவனித்தால் மட்டுமே கிராமப் பகுதிகளில் ஏற்படும் தொடர் சங்கிலியைக் கட்டுப்படுத்த முடியும்.  எனவே, கிராம மக்களிடையே நெருங்கியத் தொடர்புள்ள கிராம நிர்வாக அலுவலர்களை அந்த கிராமங்களுக்குப் பொறுப்பு அதிகாரிகளாக நியமித்துக் கண்காணித்திட அரசு உத்தரவிட வேண்டும்.

கிராமப்பகுதிகளில் உள்ள மக்கள், அரசு விதிமுறைகளைப் பின்பற்றாத நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு, அவர்கள் சம்பந்தப்பட்டத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து விரைந்து செயல்படவும் அறிவுரை வழங்கிட வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்தால் தான் கிராம அளவில் கரோனாத் தொற்று தொடர் சங்கிலி இணைப்பைக் கட்டுப்படுத்த முடியும். 

எனவே அரசு முடிவெடுத்து, கிராம நிர்வாக அதிகாரிகளைக் கிராம கண்காணிப்பு அலுவலராக நியமித்திட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்