Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பண்ருட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு

மே 27, 2021 07:51

கடலூர்: பண்ருட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர். அப்போது திடீரென 8 வயது சிறுவன் சிறிய சைக்கிளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் சென்றது அங்கிருந்த காவலர்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கொரோனா  இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பல்வேறு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரத்திற்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி பகுதியில் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் காவல் ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் ஊரடங்கு மீறி அத்தியாவசிய தேவையின்றி  சுற்றித்திரிந்தவர்கள் மீது  வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அப்போது இ-பாஸ் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது அப்போது ஒரு காரில் 4 பேர் பயணித்த நிலையில் காரை நிறுத்தி காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் விசாரித்ததில் அவர்கள் தாங்கள் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி காவல் துறையினருக்கு டிமிக்கி கொடுக்க நினைத்தனர்.

அப்போது உஷாரான காவல் துணை கண்காணிப்பாளர் காரின் பின்புறம் அமர்ந்திருந்த இரண்டு பேரை இறக்கிவிட்டு  ஓட்டுநர் மற்றும் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய  நபரை மருத்துவமனைக்கு சென்று விட்டு திரும்பி வரும்பொழுது இருவரை ஏற்றி செல்லுமாறும் காரிலிருந்து இறங்கிய இருவரை கண்காணிக்குமாறு காவலரை நிறுத்திவிட்டு காவல்துறையினர் மீண்டும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென 8 வயது சிறுவன் சிறிய சைக்கிளில்  ஹீரோ என்ட்ரி போல் காவல்துறையினர் இடையே வந்து நின்றான். அது அங்கிருந்த காவல் துறையினர் மத்தியில் புன்னகையுடன் கூடிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது காவல்துறையினர் அந்த சிறுவனிடம் எதற்காக ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர்,

எதனால் மக்கள் இறந்து வருகிறார்கள் என்று கேட்டபோது அந்த சிறுவன் சற்றும் எதிர்பாராமல் கொரோனாவால் என்று பதிலளித்தான். எங்கு சென்று வருகிறாய் என கேள்வி எழுப்பியது போது தாம் கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வருவதாக பதிலளித்தான்..

பின்பு காவல்துறையினர் சிறுவனை கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், வீட்டிற்கு சென்றவுடன் கை கால்களை அலம்பி விட்டு உள்ளே செல்ல வேண்டுமென்றும் அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தினமும் காலை அரசு நேரம் ஒதுக்கி உள்ளதாகவும் அப்போது மக்கள் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை கூடுதலாகவே வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் ஊரடங்கின் போது வெளியே  வருபவர்கள் மீது வழக்கு பதிவு கட்டாயம் செய்யப்படும் என்றும் வழக்குப் பதிவிற்கு பயந்து கொண்டு பெற்றோர்கள் சிறுவர்களை தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

வழக்கு பதிவிற்கு பயந்து சிறுவர்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினால் கட்டாயம்
அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்