Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக இடைத்தேர்தலுக்கு பாதுகாப்பு பணி துணை ராணுவம் 26-ந்தேதி வருகை

ஏப்ரல் 23, 2019 06:44

சென்னை: தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு. மதுரை தேர்தல் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்டோர்’ அறைக்குள் வட்டாட்சியர் சம்பூரணம் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி அங்கு விரைந்துள்ளார். 

அவர் அங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொள்வார். அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி அவர் விசாரித்துவிட்டு அந்த அறிக்கையை சமர்ப்பிப்பார். அதுபற்றி நான் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கிறேன். 

வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகை சீட்டு எந்திரங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங்’ அறை போலவே, தேர்தலுக்கான ஆவணங்கள், அழியாத மை போன்றவை வைக்கப்பட்டுள்ள ‘ஸ்டோர்’ அறையும் ‘சீல்’ வைத்து பூட்டப்பட வேண்டும். 

ஆனால் மதுரையில் ‘ஸ்டோர்’ அறை பூட்டப்படவில்லை என்று தெரிகிறது. அது ‘சீல்’ வைக்கப்பட்டதா? அல்லது ‘சீல்’ வைத்த பிறகு திறக்கப்பட்டதா? என்பதையெல்லாம் பாலாஜி விசாரிப்பார். தபால் ஓட்டுகள் அனைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் தனியாக வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். 

மறுவாக்கு பதிவுக்கான வாக்குச்சாவடிகள் எவை என்பதை இந்திய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை அனுப்பிவிட்டோம். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும். பொதுவாக வன்முறை நடந்து உடனே முடிவுக்கு வந்துவிட்டால், அங்கு மறுநாளிலேயே மறுவாக்குப்பதிவு நடத்தலாம். 

அப்படி இல்லாத சூழ்நிலையில், பல்வேறு அம்சங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் என்பதால் பல ஆவணங்களை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். 

சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட குன்னம் பகுதியில் 281-ம் வாக்குச்சாவடியிலும் வன்முறையின் காரணமாக பலரால் வாக்குப்பதிவு செய்ய முடியவில்லை என்றும், அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மனு கொடுத்துள்ளார். 

ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களை சிலர் ஓட்டுபோட அனுமதிக்கவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன். ஏன் இதுபற்றி உடனடியாக கூறவில்லை என்று கேட்டிருக்கிறேன். மாவட்ட தேர்தல் அதிகாரி தரும் அறிக்கைக்கு பிறகு முடிவு மேற்கொள்ளப்படும். 

வாக்கு எண்ணும் மையங்களில் அரசியல் கட்சி முகவர்கள் யாரும் இரவு 10 மணிக்கு மேல் இருக்கக்கூடாது என்று சில இடங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உத்தரவிடுவதாக அரசியல் கட்சியினர் கூறியுள்ளனர். 24 மணி நேரமும் அங்கு கட்சி முகவர்கள் இருக்கலாம். அதற்கு சட்டத்தில் இடமுள்ளது. 

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சம்பவத்துக்கு பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். 

இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ள மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினர் செயல்படுவார்கள். 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 13 கம்பெனி துணை ராணுவம் 26-ந்தேதி வருகிறது. 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துவிட்டாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்துவதற்கான இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவு இன்னும் வரவில்லை. மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்கின்றன. 

தமிழகத்தில் அவசரமாக திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு கேட்டுக்கொண்டால் உடனடியாக தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்று அவற்றை நிறைவேற்றலாம். 

அரசு பணிகளை ஆற்ற முதல்-அமைச்சருக்கு தடை இல்லை. ஆனால் உரையாற்றுவது, செய்தி வெளியீடு அளிப்பது ஆகியவற்றில் இன்னும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தேர்தல் கமிஷன் கண்காணிக்கும். திருச்சி அருகே 7 பேர் இறந்த சம்பவத்தில் கூட தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்ற பிறகுதான் அறிவிப்பை அரசு வெளியிட்டது. 
 

தலைப்புச்செய்திகள்