Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி- ஐகோர்ட் பாராட்டு

மே 28, 2021 10:31

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது, தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் தடுப்பூசி மற்றும் மருந்து ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான லைசோசோமால் மருந்து போதுமான அளவு
ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீடு தவிர்த்து, சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக்சிஜன் செறிவூட்டிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சை கட்டணம் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிர்ணயித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் நர்சிங் மாணவிகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது வக்கீல் கனகராஜ் என்பவர், ‘‘கொரோனாவால் பலியானவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல், அரசே அடக்கம் செய்து விடுகிறது. இதனால், இறந்தவர்களின் முகத்தை கடைசியாக உறவினர்களால் சரியாக பார்க்க முடியவில்லை. எனவே, இறந்தவரின் உடலை பாலித்தீன் துணியால் பொதியும்போது, அவரது முகத்தை உறவினர்கள் பார்க்கும் வண்ணம் இருக்கவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘இறந்தவரின் முகத்தை உறவினர்கள் பார்க்கும் விதமாக, முகம் மட்டும் தெரியும் விதமாக உடலை பொதிய வேண்டும்’ என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள்,

‘‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளது. அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது’’ என்று கூறினர். பின்னர் இந்த வழக்கை வருகிற 31-ந்தேதிக்கு
தள்ளிவைத்தனர்.

தலைப்புச்செய்திகள்