Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை இந்த ஆண்டு சமர்ப்பிக்க வேண்டாம்- விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு

மே 28, 2021 10:52

சென்னை: நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாநில அரசின் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழை சம்பந்தப்பட்ட ஓய்வூதிய வழங்கல் அலுவலரிடம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் வழங்க வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

மேலும், அப்படி யாரும் உயிர்வாழ் சான்றிதழை வழங்காவிட்டால் அவர் நேரில் ஆஜராகும்படி அக்டோபர் மாதம் அந்த அலுவலர் அழைப்பு விடுப்பார்.
அப்போதும் நேரில் ஆஜராகாவிட்டாலோ அல்லது உயிர்வாழ் சான்றிதழை வழங்காவிட்டாலோ, நவம்பர் மாதத்தில் இருந்து ஓய்வூதியம் மற்றும் குடும்ப
ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு, ஆண்டு தோறும் நடத்தப்படும் ஓய்வூதியர் தகவல் திரட்டும் பணிகளுக்கு 2020-ம் ஆண்டு விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சில ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள், தற்போது நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலையில் கடந்த ஆண்டை போலவே 2021-ம் ஆண்டிற்கும் அந்த பணிகளுக்கு விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளன.

கொரோனா தொற்று பரவலில் 2-வது அலை வீசும் சூழ்நிலையில், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் உயிர்வாழ் சான்றிதழ்களை வாங்கும் பணியை மேற்கொண்டால், ஏற்கனவே வயதாகியதால் உள்ள சிரமங்களுடன் தொற்றும் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது. அது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று கருவூலங்கள் மற்றும் கணக்குகள் ஆணையர் கூறியுள்ளார்.

மேலும், ஓய்வூதியர் தகவல் திரட்டும் பணிகளுக்கோ அல்லது ‘ஜீவன் பிரம்மான் போர்டெல்’ மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை பெறும் பணிகளுக்கோ
விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

‘ஜீவன் பிரம்மான் போர்டெல்’ மூலம் உயிர்வாழ் சான்றிதழை அனுப்புவதற்கும் அவர்கள், பொது சேவை மையங்களுக்கு செல்ல வேண்டியதிருக்கும். கொரோனா பரவல் உள்ள சூழ்நிலையில் அது அவர்களுக்கு அபாயகரமாக அமையும்.

எனவே 2021-ம் ஆண்டிற்கும் ஓய்வூதியர் தகவல் திரட்டும் பணிகளுக்கும், ‘ஜீவன் பிரம்மான் போர்டெல்’ மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை
அனுப்புவதற்கும் தற்காலிகமாக விலக்கு அளித்து அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்