Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘பைசர்’ தடுப்பூசி இறக்குமதிக்கு மத்திய அரசு நடவடிக்கை

மே 28, 2021 11:00

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும், ரஷியாவில் இருந்து குறைந்த அளவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத்தவிர வேறு பல்வேறு தடுப்பூசிகளையும் இறக்குமதி செய்து பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதில் முக்கியமாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக இந்தியாவின் கொரோனா தடுப்பு சிறப்புக்குழு தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார். இந்தியாவின் தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்த கட்டுக்கதைகளும், உண்மைகளும் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

இந்தியாவுக்காகவும், உலகிற்காகவும் இந்தியாவிலேயே தடுப்பூசியை உற்பத்தி செய்ய வருமாறு சர்வதேச தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அனைவரிடமும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். குறிப்பாக கடந்த ஆண்டு மத்தியில் இருந்தே முக்கியமான சர்வதேச நிறுவனங்களுடன் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறோம்.

அந்தவகையில் பைசர், ஜான்சன் அன்ட் ஜான்சன், மாடர்னா ஆகிய நிறுவனங்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்தியாவுக்கு வினியோகம் அல்லது இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கவும் அரசு முன்வந்தது. ஆனால் சர்வதேச அளவில் தடுப்பூசி வினியோகம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தங்கள் சொந்த முன்னுரிமைகளை நிறைவேற்றும் கட்டாயங்கள் உள்ளன. இதனால் சர்வதேச அளவிலான தடுப்பூசி ஏற்றுமதி மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது.

எனினும் இந்த கட்டாயங்களை முடித்து தடுப்பூசி இருப்பு குறித்து பைசர் நிறுவனம் தகவல் தெரிவித்தவுடன், அந்த தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. தற்போதைய நிலையில் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக பைசர் தடுப்பூசியை இறக்குதி செய்வதற்கு பைசர் நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இவ்வாறு டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார்.

இந்தியாவில் காணப்படும் பல்வேறு உருமாறிய கொரோனா தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி சிறப்பாக செயல்படும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த தடுப்பூசி மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடுவதற்கான உரிமம் பெற்று இருக்கிறது. மேலும் இந்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி வெப்பநிலையில் 1 மாதம் வரை சேமித்து வைக்க முடியும்.

வருகிற ஜூலை முதல் அக்டோபர் மாதத்துக்கு இடையே 5 கோடி டோஸ்களை இந்தியாவுக்கு வழங்க தயாராக இருப்பதாக பைசர் ஏற்கனவே கூறியிருந்தது
குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்