Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 117 புயல்கள்: 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் பலி

மே 28, 2021 11:05

புதுடெல்லி: இந்தியாவில், 1970 முதல் 2019-ம் ஆண்டு வரை கடந்த 50 ஆண்டுகளில் நடந்த புயல் தாக்குதல்கள் பற்றிய செயற்கைகோள் தகவல்கள் ஆய்வு செய்து பார்க்கப்பட்டது. அப்போது 7 ஆயிரத்து 63 காலநிலை மாற்றங்கள் பதிவானதாக தெரியவந்தது. இதன் மூலம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 308 பேர் பலியாகி உள்ளனர்.

இதில் 117 புயல்கள் தாக்கி, 40 ஆயிரத்து 358 பேர் புயல்களுக்கு பலியாகி இருக்கிறார்கள். சுமார் 46 சதவீதம் பேர் அதாவது 65 ஆயிரத்து 130 பேர், வெள்ளம்
மற்றும் பாதிப்புகளால் இறந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

புவி அறிவியல் அமைச்சகத்துறை செயலாளர் ராஜீவன் மற்றும் விஞ்ஞானி கமல்ஜித்ரே உள்ளிட்டோரின் ஆராய்ச்சி கட்டுரையில் இந்த தகவல்கள் இடம்
பெற்றுள்ளன. அவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதுபற்றிய ஆய்வு முடிவை வெளியிட்டனர். டவ்தே புயல் சேதத்தை அடுத்து இந்த தகவல்கள்
பரபரப்பாக பேசப்பட ஆரம்பித்துள்ளது.

இந்த மாதத்தில் மேற்கு கடற்கரையில் உருவான டவ்தே புயல், குஜராத் மற்றும் அண்டை பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் குஜராத் மற்றும் அண்டை
மாநிலங்களில் 50 பேர் பலியானார்கள். இந்தியாவின் கிழக்கு கடற்கரை மாநிலங்களான ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரை பகுதிகள் அதிகமாக புயல்களால் பாதிக்கப்படும் பகுதிகள் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த புதன்கிழமை இங்கு புயல்தாக்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளில் புயல் போன்ற காலநிலை மாற்றங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட துல்லியமான வானிலை மையங்களின் முன்னறிவிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளே காரணம் என்று தெரியவந்துள்ளது. 1971-ல் வங்காள விரிகுடாவில், 6 வார இடைவெளியில் 4 புயல்கள் தாக்கி உள்ளன. இந்த புயல்கள் ஒடிசாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. 10 ஆயிரம் பேருக்கு மேல் உயிர்கள் இழப்பு ஏற்பட்டது, 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்தார்கள்.

அதுபோல 1977-ம் ஆண்டிலும் வங்காள விரிகுடாவில் மீண்டும் 2 கடுமையான புயல்கள் தாக்கின. அப்போது ஆந்திரா கடற்கரை பகுதிகளில் 200 கிலோமீட்டர்
வேகத்தில் காற்று வீசியது. 5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பின. இதிலும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். 2.5 கோடி அமெரிக்க டாலர்
அளவில் கட்டமைப்பு மற்றும் பயிர்ச்சேதம் ஏற்பட்டது.

1970-1980 ஆண்டு காலத்தில் 20 ஆயிரம் உயிர்ப்பலிகள் புயல்களால் ஏற்பட்டது. அந்த காலத்தை ஒப்பிடுகையில் கடந்த 2010-2019 ஆண்டு காலத்தில்
உயிர்ப்பலிகள் 88 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரத்தில் இந்த 10 ஆண்டுகளில் பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் கடுமையான புயல்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்திய வானிலை மைய பொதுஇயக்குனர் மிருத்தியுஞ்ஜய் மகாபத்ரா கூறும்போது, “வானிலை மையங்களின் முன்னறிவிப்பால்தான் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போதைய உயிரிழப்புகள் பெரும்பாலும் புயல்களால் அன்றி மரங்கள் விழுதல், வீடுகள் இடிவதால் ஏற்படுகின்றன. முன்னறிவிப்புகளால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்படுவதால் இறப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
 

தலைப்புச்செய்திகள்