Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தரபிரதேசத்தில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய குட்டி விமானம்

மே 28, 2021 11:08

மதுரா: உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த தனியார் விமானிகள் பயிற்சி மையத்தை சேர்ந்த, செஸ்னா 152 என்ற நவீன பயிற்சி விமானம், 2 இருக்கைகள் கொண்டது. இந்த பயிற்சி விமானம் அரியானாவின் நார்நாலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தது. நேற்று பகல் 1.15 மணிக்கு மதுராவின் நாஜ்கில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரநிலையாக யமுனா நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பைலட்டுகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதை அறிந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் கூடி விமானத்தை வேடிக்கை பார்த்தனர். விமானம் தரையிறங்கியதால் அந்த வழியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பின்னர், விமானி பயிற்சி மைய தொழில்நுட்ப பிரிவினர் வந்து, கோளாறை சரிசெய்த பின்பு விமானம் மீண்டும் பறந்து சென்றது.

இதற்கு முன்பு, இந்திய விமானப்படையின் விமானங்கள், விமான நிலையங்கள் செயல்படாத நிலையில் தரையிறங்கும் சோதனை முயற்சியாக யமுனா நெடுஞ்சாலையில் இறக்கி பார்க்கப்பட்டுள்ளன. அதன்பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக யமுனா நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதிகள் மூடி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்