Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியார் தொலைக்காட்சி நிருபர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

மே 30, 2021 07:23

திருவாரூர்: மன்னார்குடியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சைபலனின்றி இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராசப்பன் சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 38 வயது. இவர் தனியார் தொலைக்காட்சியில் திருவாரூர் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வந்தார் இவருக்கு அனுசியா என்ற மனைவியும் 3 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது இந்நிலையில் இவருடைய மனைவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

கடந்த ஆண்டு கொரோனா காலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் நிகழும் நிகழ்வுகளை செய்தியாக்கி அனுப்பி வந்தார் செந்தில்குமார். இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் மருத்துவர்கள் அவருக்கு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

29ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தியாளர்கள் மத்தியிலும் அவரது குடும்பத்தினர்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றுபவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வந்த செந்தில்குமார் தற்போது உயிர் இழந்துள்ளார். 

அவருக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என சக பத்திரிக்கையாளர்களும் அவரது குடும்பத்தினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்