Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

மே 31, 2021 12:32

புதுச்சேரி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை மத்திய அரசிடமிருந்து புதுவை அரசு கேட்டுப் பெற்று  வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது புதுவைக்கு 7 வெண்டிலேட்டர் கருவிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதனை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் உள்ள மருந்தகத்தில் நேற்று காலை நடந்தது.

நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி, வெண்டிலேட்டர் கருவிகளை சுகாதாரத்துறை செயலாளர் அருணிடம் ஒப்படைத்தார். இதில் மாநில சுகாதார திட்ட இயக்குனர் ஸ்ரீராமலு மற்றும் அரசு மருந்தக பொறுப்பாளர் உடன் இருந்தனர். இதன்பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர் களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு இதுவரை 17 வெண்டிலேட்டர் கருவிகளை வழங்கி இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு
இருக்கிறது. இதுவரை 350 வெண்டிலேட்டர் மற்றும் 1,800 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தினமும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

ரெம்டெசிவிர் மருந்து மற்றும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து மத்திய அரசிடம் இருந்து தேவையான அளவு பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அரசின் முயற்சியால் புதுச்சேரியில் கொரோனா பரவல் 50 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.

கொரோனாவை கட்டுப் படுத்த மற்ற மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரம் மற்றும் பிற துறைகளின் உதவியோடும் மக்களின் ஒத்துழைப்போடும் கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும்.

தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம். எனவே அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 95 சதவீதம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

ஏழை, எளிய மக்களின் பொருளாதாரம் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காகத்தான் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்