Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தலுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்களின் அவல நிலை. 

ஜுன் 01, 2021 11:40

திருவாரூர், ஜூன்.3: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சொந்த தொகுதியில் காவல் நிலைய அதிகாரிகள் பணியில் இருத்தல் கூடாது என்கிற தேர்தல்
நடத்தை விதிமுறைகளின்படி தமிழகம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து
அருகிலுள்ள மாவட்டம் மற்றும் அருகிலுள்ள தொகுதிக்கு மாற்றப்பட்டனர். 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இவ்வாறு தேர்தலுக்காக திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை போன்ற பல இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாத காலமாகியும் ஏற்கனவே அவர்கள் பணிபுரிந்த இடத்திற்கு மாற்றம் செய்யப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர் மயிலாடுதுறை போன்ற  மாவட்டங்களில் இவ்வாறு தேர்தலுக்காக  பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல் மற்றும் துணை காவல்
ஆய்வாளர்கள் மீண்டும் தங்கள் பணி புரிந்த அதே இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தேர்தலுக்காக மாற்றம் செய்யப்பட்ட காவல் அதிகாரிகளில் பெண்களும் அடங்குவர்.

இவர்கள் திருவாரூரில் இருந்து முத்துப்பேட்டை போன்ற ஊர்களுக்கு காலை 7 மணிக்கு பணிக்கு செல்வதில் தொடங்கி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் காவல் ஆய்வாளர்கள் வேறு மாவட்டத்திற்கும், காவல் துணை ஆய்வாளர்கள் வேறு தொகுதிக்கும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளை அந்தக் வட்டத்திற்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள்  அவர்களது காவல் நிலைய பணி மட்டுமல்லாமல் மற்ற காவல் நிலைய பணி மற்றும் அருகில் உள்ள சோதனை சாவடி பணிகளுக்கும் அனுப்புவதால் தங்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

கொரோனா காலக்கட்டத்தில் இரவு பகல் பாராமல் கடமையாற்றுகின்ற காவலர்களுக்கு இதுபோன்ற அலைக்கழிப்புகள் மேலும் மன உளைச்சலையும் பணிச் சுமையையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஐ.பி.எஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்து அருகில் உள்ள மற்ற மாவட்டங்களை போல் தங்களையும் ஏற்கனவே பணிபுரிந்த இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தலைப்புச்செய்திகள்