Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விதிமுறைகளை புறக்கணித்தால் கொரோனா 3-வது அலை முன்கூட்டியே தாக்கும்

ஜுன் 05, 2021 01:49

புதுடெல்லி: கொரோனா 2-வது அலை இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாதிப்பை விட உயிரிழப்பு அதிகமாக இருந்ததால் நாடு முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது. தற்போது பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு மேல் சென்றது.தற்போது தினசரி பாதிப்பு 1.20 லட்சமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2.86 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 3.44 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் 3-வது அலையின் பாதிப்பு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மத்திய அரசு நிபுணர்களின் குழு எச்சரித்துள்ளது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை 3-வது அலையின் பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் 3-வது அலை முன்கூட்டியே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிதி அயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பவுல் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

தற்போது கொரோனா 2வது அலை பாதிப்பில் நாடு முழுவதும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2-வது அலையை சிறப்பாக கையாண்டோம். இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என்று நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்றுவதில்லை. இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

விதிமுறைகளை புறக்கணித்தால் கொரோனா 3-வது அலை முன்கூட்டியே தாக்கும். அதன் பாதிப்பு தொடக்கத்திலேயே அதிகரிக்கும். இதனால் மக்கள் அனைவரும் கொரோனாவுக்கான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். அதிகளவில் ஒரே இடத்தில் கூட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்