Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை, திருச்சியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஜுன் 05, 2021 02:05

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் தினந்தோறும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது முக்கியம் என அரசு தெரிவித்து வருகிறது. மாவட்டத்தில் முதலில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

தொடர்ந்து மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டினர். கோவை மாவட்டத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரி, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி, சூலூர் ஆஸ்பத்திரி, வால்பாறை அரசு ஆஸ்பத்திரி, காரமடை அரசு ஆஸ்பத்திரி, அன்னூர் அரசு ஆஸ்பத்திரி உள்பட 15-க்கும் மேற்பட்ட அரசு ஆஸ்பத்திரிகள், ஏராளமான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டத்திற்கு 48 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. அவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. மக்களிடையே தடுப்பூசி செலுத்த ஆர்வம் அதிகரித்ததால் நேற்று ஒரே நாளில் அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டன.

இதனால் தற்போது தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை. இதையடுத்து இன்று மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர கோவை மாநகரில் இன்று 49 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் அந்த முகாம்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், கடந்த 3 நாள்களாக, கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் 36 சிறப்பு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. இதற்கென டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி இருப்பு குறைவாக உள்ளதால், இன்று மாநகரில் 5 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது. தடுப்பூசிகள் வந்ததும் மீண்டும் தடுப்பூசி செலுத்துவது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

இதேபோல் புறநகர் பகுதிகளிலும் தடுப்பூசி போடுவது இன்று ஒருநாள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஊரக பகுதிகளுக்கு இன்று 5 ஆயிரம் தடுப்பூசிகள் வருகிறது. இவை நாளை முதல் போடப்பட உள்ளதாக சுகாதாரத் துறை துணை இயக்குநனர் செந்தில்குமார் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு தேவையை தடுப்பூசிகளை தர மறுப்பதாக கோவை எம்.பி நடராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தர மறுக்கிறது.

தமிழ்நாட்டை காட்டிலும் குறைவான மக்கள் தொகை உள்ள பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவில் தடுப்பசி வழங்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு மட்டும் குறைந்த தடுப்பூசிகளை வழங்குகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவோம் என பிரதமர் வாக்குறுதி அளிப்பது மட்டுமல்லாமல், அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள், 14 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 151 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தடுப்பூசிகளின் கையிருப்பு நிலையினை கருத்தில் கொண்டு இன்று (5-ந்தேதி) நடைபெற வேண்டிய தடுப்பூசி முகாம்கள் இம்மாவட்டத்தின் நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் நடைபெறாது என்று தெரிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கின் அடிப்படையில்தான் அரசு செயல்பட்டு வருகிறது. மருந்துகள் தொடர்ந்து வந்தபோதிலும், சில நேரங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதுபற்றிய அறிவிப்பு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தடுப்பூசி மருந்துகள் இல்லாததால் சிறப்பு முகாம்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றவுடன் முகாம்கள் மீண்டும் செயல்படுத்துவது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்