Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய கரோனா அனுபவத்தைப் பகிர்ந்த வார்னர்

ஜுன் 05, 2021 02:28

கரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியாவில் இருந்த நிகழ்வு திகிலூட்டச் செய்வதாக இருந்தது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது. சர்வதேச வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கரோனா இந்தியாவில் தீவிரமாக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை டி.வி.,யில் அப்போது பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது.

நாங்கள் மைதானத்துக்கு செல்லும்போது கரோனாவால் இழந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் உடலுடன் மக்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்திருக்கிறோம். நிச்சயம் அது திகிலூட்டியது. மனிதாபிமான பார்வையில் உண்மையில் வருத்தமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்