Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிபிஐ அதிகாரிகள் அலுவலக நேரத்தில் ஜீன்ஸ், டி.ஷர்ட் அணிய தடை

ஜுன் 05, 2021 02:32

புதுடெல்லி:நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு அலுவலக நேரத்தில் ஜீன்ஸ், டி.ஷர்ட் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிபிஐ.யின் புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த 26-ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல் சிபிஐ அலுவலங்களில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த வகையில் அலுவலக நேரத்தில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான உடை மீது புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் இனி ஜீன்ஸ் மற்றும் டி.ஷர்ட் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், அரசு அதிகாரிகளின் அதிகாரப் பூர்வ அலுவலக முறைப்படியான உடைகளை அணிய வேண்டும், பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிய வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறும்போது, “அலுவலக உடை தொடர்பாக அனைத்து அலுவலகங்களுக்கும் ஏற்கெனவே மத்திய அரசின் உத்தரவு உள்ளது. இதை அதிகாரிகள் பலரும் முறையாக பின்பற்றவில்லை எனப் புகார் உள்ளது. இந்தச் சூழலில் அனைத்து சிபிஐ அலுவலகங்களிலும் உடை தொடர்பான தனது உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என புதிய இயக்குநர் கூறியுள்ளார்” என்று தெரிவித்தன.

நாடு முழுவதிலும் சிபிஐ அதிகாரிகள் ஜீன்ஸ், டி.ஷர்ட் அதிகம் அணிவதாகப் புகார் உள்ளது. இளைஞர்கள் அதிகம் அணியும் இதுபோன்ற உடைகளை அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களிலும் அனுமதிப்பது இல்லை. இந்நிலையில் சிபிஐ அதிகாரி களுக்கு மேற்கண்ட தடையுடன் அலுவலக நேரத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான காலணிகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்