Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகளவில் கொரோனா பாதித்த 3 பேரில் ஒருவர் இந்தியர்

ஜுன் 06, 2021 04:37

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும்கூட உலகளவில் மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது.

இந்தியாவில் நேற்று 1 லட்சத்து 20 ஆயிரத்து 529 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. 3,380 பேர் கொரோனாவால் இறந்ததாக பதிவானது. உலகளவில் அந்த கணத்தில் பாதிப்புக்குள்ளானோரில் மூன்றில் ஒருவர் இந்தியர். 3-ந்தேதி நாடு முழுவதும் 20.75 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இந்தியாவில் பரிசோதனைகளில் பாதிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதில் பாதிப்பு விகிதம் 5.5 சதவீதம். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னதாக பாதிப்பு விகிதம் 10.4 சதவீதமாக இருந்தது.

நேற்று முன்தினம் காலை 7 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 28.75 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் இது 4.5 லட்சம் அதிகம். ஒரு வார தடுப்பூசி சராசரி 26.26 லட்சம். முந்தைய மாதத்தின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது 18.09 லட்சம் அதிகம்.

இந்தியாவில் இளம் வயதினரில் 19 சதவீதத்தினர், 45 வயதுக்கு மேற்பட்டோரில் 39.6 சதவீதத்தினர், முதியோரில் 44.1 சதவீதத்தினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி செலுத்தி உள்ளனர். இளம் வயதினரில் உத்தரபிரதேசத்தில் 11 சதவீதத்தினரும், பீகாரில் 12 சதவீதத்தினரும், தமிழ்நாட்டில் 13 சதவீதத்தினரும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி உள்ளனர்.

குஜராத்திலும், ராஜஸ்தானிலும் 28 சதவீதத்தினர், உத்தரகாண்டில் 29 சதவீதத்தினர், இமாச்சலபிரதேசத்தில் 38 சதவீதத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டுள்ளனர். மொத்தமாக நாட்டின் மக்கள் தொகையில் 13.2 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ளனர். 3,3 சதவீதத்தினர் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

உலகளவில் தினந்தோறும் கொரோனாவால் ஏற்படுகிற சராசரி இறப்பும் இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழப்போரில் 3-ல் ஒருவர் இந்தியாவில் இறப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தலைப்புச்செய்திகள்