Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். இடையே தொடரும் ‘மவுன யுத்தம்’

ஜுன் 06, 2021 05:25

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து முதல் முறையாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

ஆனால் ''ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அவர் தனது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதால் வர இயலவில்லை. இன்று நல்ல நாள் என்பதால் நான் தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.

மேலும், சசிகலா ஆடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை. சசிகலா அ.ம.மு.க. கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோதான் வெளியானது. அ.தி.மு.க. தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை. குழப்பம் விளைவிக்கும் சசிகலாவின் முயற்சி வெற்றி பெறாது என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில்தான் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார். அரசு பங்களாவைக் காலி செய்த ஓ.பன்னீர்செல்வம், தற்காலிகமாக தி.நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். தற்போது அரசு பங்களாவிலிருந்து பொருட்களை அந்த இல்லத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெற்றுவருவதால் தனியார் விடுதியில் தங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு சாதாரணமானது. ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காகத்தான் எடப்படி பழனிசாமி சென்றார் என்று கட்சி அறிவித்தாலும் உண்மை அதுவல்ல என்பதை கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகிறார்கள். சசிகலா விவகாரம் மீண்டும் தலை தூக்கி இருக்கும் நிலையில் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். எனவே கட்சி மீதும், தன் மீதும் விசுவாசம் மிக்கவர்களை எல்லா மட்டத்திலும் கொண்டு வருவதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.

அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியில் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதில் காய்களை நகர்த்தி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே மவுன யுத்தம் நடப்பதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா பதவிகளை யாருக்கு வழங்குவது என்பதிலும் இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனது ஆதரவாளர் ஒருவருக்கு கொறடா பதவி வழங்க பரிந்துரைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்றைய சந்திப்பின் போது இதுதொடர்பாக விவாதித்து இருக்கிறார்கள். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தலைப்புச்செய்திகள்