Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய டெல்லி அரசின் அதிரடி திட்டம்

ஜுன் 07, 2021 06:35

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. கடைகள், மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில், டெல்லியில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட வரும் நபர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. எனவே, தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக, வாக்குச்சாவடி வாரியாக வீடு வீடாகச் சென்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களை கணக்கெடுக்கும் பணியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக வீடு வீடாக கணக்கெடுக்கப்படும். இதற்காக வாக்குச்சாவடி வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்துவார்கள். அதன் அடிப்படையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி ஒதுக்கப்படும். இந்த திட்டம் நாளை 70 வார்டுகளில் நடைமுறைக்கு வருகிறது.

டெல்லியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 57 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 27 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். குறைந்த அளவில் மட்டுமே தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி போடுகின்றனர். எனவே, மீதமுள்ளவர்கள் வருவார்கள் என்று காத்திருப்பதற்கு பதிலாக, தடுப்பூசி போடுவதற்காக நாங்களே அவர்களிடம் செல்ல உள்ளோம். 

டெல்லியில் மொத்தம் 280 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வாரமும் 70 வார்டுகளில் கணக்கெடுப்பு நடத்தி தகுதி வாய்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்றால், 4 வாரங்களுக்குள் 45 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும். வாக்குச் சாவடிகள் எங்கு இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். வாக்குச்சாவடிகள் தங்கள் வீடுகளிலிருந்து நடந்து செல்லக்கூடிய தொலைவில் இருப்பதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் எளிதில் செல்ல முடியும்.

யாராவது தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால், அவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் உரிய விளக்கம் அளித்து, தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்கி, தடுப்பூசியை செலுத்த முயற்சிப்பார்கள். இதற்காக அதிகாரிகளுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, தடுப்பூசி போட்டுக்கொள்ள வராவிட்டால் அதிகாரிகள் மீண்டும் சென்று தடுப்பூசி போட வலியுறுத்துவார்கள். 

மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வாக்குச் சாவடிக்கு செல்வதற்கு இ-ரிக்‌ஷாக்கள் கிடைப்பதால், அவர்கள் எளிதில் சென்றடைய முடியும். தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படும். போதுமான அளவு தடுப்பூசி இருக்கும்போது, 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கும் இந்த திட்டம் பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்