Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் மிகப்பெரிய ஊழல் நடக்காமல் மத்திய அரசு தடுத்துள்ளது: பாஜக பெருமிதம்

ஜுன் 07, 2021 06:41

புதுடெல்லி : டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து இருந்தது. ஆனால், அதை கவர்னர் நேற்று முன்தினம் நிராகரித்தார். மத்திய அரசின் ஒப்புதலை பெறாததாலும், டெல்லி ஐகோர்ட்டில் இதற்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதாலும் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று அவர் கூறினார்.

இதற்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கண்டனம் தெரிவித்தார். தேசநலன் கருதி, நாடு முழுவதும் இதை அமல்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார். இந்தநிலையில், அவருக்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை நிறுத்தவோ, மாற்றி அமைக்கவோ எந்த மாநிலத்துக்கும் உரிமை கிடையாது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திட்டத்தை நிறுத்திவிட்டு, தனது சொந்த திட்டத்தை தொடங்க விரும்புகிறார். அப்படியானால், அவர் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உணவு தானியங்களை வாங்கி, வீடு தேடிச்சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம்.

டெல்லியில், ரேஷன் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடக்கவில்லை. ரேஷன் கடைகளில், விரல் ரேகையை சரிபார்க்கும் பாயிண்ட் ஆப் சேல் கருவி பயன்பாட்டையும் நிறுத்திவிட்டது. இதனால், ரேஷன் பொருட்கள் உரிய நபர்களுக்குத்தான் வழங்கப்படுகிறதா அல்லது வேறு பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்படுகிறதா என்பதை கண்டுபிடிக்க வழியே இல்லை.

எனவே, அரவிந்த் கெஜ்ரிவால் யாருக்கு ரேஷன் கொடுக்கப்போகிறார் என்று தெரியாது. அந்த பொருட்கள் திருப்பிவிடப்பட்டு, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படலாம். இப்படிப்பட்ட மிகப்பெரிய ஊழலை செய்ய அவர் விரும்பினார். அது நடைபெறாமல் மத்திய அரசு தடுத்துள்ளது.

ரேஷன் கடைகள், கொரோனா பரப்பும் இடங்களாகி விடும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார். டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவாதா? இவ்வாறு அவர் கூறினாா்.
 

தலைப்புச்செய்திகள்