Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து கவர்னர் தமிழிசையுடன் ரங்கசாமி ஆலோசனை

ஜுன் 07, 2021 06:43

புதுச்சேரி: கொரோனா 2-வது அலை புதுவையில் அதிவேகமாக பரவியது. கொரோனா பரவலை தடுக்க கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மதியம் 12 மணி வரை அத்தியவாசிய கடை களை மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. பொது போக்குவரத்து, வணிக வளாகங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. மதுபான கடைகளும் அடைக்கப்பட்டது.

கொரோனா பரவல் அதிகரித்து வந்தததால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த 31-ந் தேதியுடன் முடிந்த ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளித்து ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு நிறைவுபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. தெலுங்கானாவுக்கு சென்ற கவர்னர் தமிழிசை இன்னுமு புதுவை திரும்பவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் கொரோனா மேலாண்மை கூட்டத்தை காணொலியில் நடத்தினார். அப்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புதுவை சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன், கவர்னர் தமிழிசை போனில் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாலை 5 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால், மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை.
தமிழகத்தை பின்பற்றி புதுவையில் மாலை 5 மணி வரை கடைகளை திறக்க அனுமதிப்பதா? அல்லது மதியம் 2 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்கலாமா? என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அரசுக்கு வரி வருவாய் தரக்கூடிய மதுபான கடைகளை குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாராயம், கள், மதுபான கடைகளை மூடியதால் கள்ளச்சாராயம், எரி சாராயம் விற்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து மது பானங்கள் கடத்தி வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதை தடுக்கும் வகையில் மதுபான கடைகளை திறப்பது? குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். அதேநேரத்தில் மதுபான கடைகளை திறந்தால் அண்டை மாநிலத்தில் இருந்து மதுபானங்களை வாங்க புதுவைக்கு மதுபான பிரியர்கள் படையெடுக்கக்கூடும். இதனால் தொற்று பரவும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதுதொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி இன்று மாலை ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

தலைப்புச்செய்திகள்