Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மசூதியில் யாகம் நடத்துவதாக சாத்வி பிராச்சி அறிவிப்பால் பதட்டம்

ஜுன் 07, 2021 06:47

உத்தரப்பிரதேசம்:  உத்தரப்பிரதேசம்அலிகரின் நூர்பூர் கிராமத்தில் திருமண ஊர்வலங்கள் நடத்துவதில், தலீத்துகள் மற்றும் முஸ்லிம்கள் இடையே மோதல் உருவானது. இங்குள்ள மசூதியில் விஸ்வ இந்து பரிஷத்தின்(விஎச்பி) சாத்வி பிராச்சி, யாகம் நடத்துவதாக அறிவித்ததால் பதட்டம் நிலவி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அலிகரின் தப்பல் தாலுகாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நூர்பூர் கிராமம் உள்ளது. இங்கு வாழும் சுமார் 1000 பேர் கொண்ட தலித்துகளின் ஒரு குடும்பத் திருமண ஊர்வலம் கடந்த மே 25 இல் நடைபெற்றது.

இதை தொழுகை நேரத்தில் மசூதிக்கு முன்பாக செல்ல அனுமதிக்க முடியாது என முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவருக்கு இடையே நடைபெற்ற மோதலில் தலித்துகள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகப் புகார் இருந்தது. இதையடுத்து, ‘வீடு விற்பனைக்கு’ என தங்குகள் சுவர்களில் எழுதிய தலித்துகள் கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர். காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என வெளியான இந்த செய்தியால் சர்ச்சை எழுந்தது.

செய்திக்கு பின் அங்கு அலிகரின் பாஜக எம்.பியான சதீஷ் கவுதமும், அப்பகுதியின் எம்எல்ஏவான அனுப் வால்மீகியும் நேரில் சென்றிருந்தனர். அங்குள்ள தலித் குடும்பங்களை சந்தித்து ஆசுவாசப்படுத்தினர். இது அடுத்த வருடம் உ.பி.யில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பிளவை உருவாக்கும் செயல் எனவும் புகார் எழுந்தது. இச்சூழலில் விஎச்பியின் முக்கியத் தலைவரான சாத்வி பிராச்சி கொடுத்த அறிவிப்பால் நூர்பூரில் பதட்டம் உருவாகி விட்டது.

தலீத்துகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சாத்வி, நூர்பூரின் மசூதியில் நுழைந்து யாகம் நடத்தப் போவதாக அறிவித்தார். விஎச்பியின் மூத்த பெண் தலைவரான சாத்வி பிராச்சி, சர்ச்சை பேச்சுக்களுக்களால் பிரபலமானவர். இவர், நேற்று காலை வெளியிட்ட அறிவிப்பால் அலிகர் பகுதியை சேர்ந்த பாஜக மற்றும் விஎச்பியினர் நூர்பூரில் குவியத் துவங்கினர். இதனால், இரண்டு சமுதாயங்களுக்குள் மோதல் உருவாகும் அச்சம் எழுந்துள்ளது.

எனவே, இவர்களை கிராமத்தின் உள்ளே நுழைய விடாமல் அலிகர் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், நூர்பூரில் பதட்டம் நிலவ அங்கு இதுவரையும் சாத்வி பிராச்சியும் வரவில்லை. தொடர்ந்து அக்கிராமத்தில் புதியவர்கள் நுழையாதபடி போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மே 25 சம்பவத்தில், வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளின் பிரிவில் பெயர் தெரியாத 11 முஸ்லிம்கள் மீதும், முகக்கவசம், சமூகவிலகல் இன்றி, கரோனா பாதுகாப்பை மீறியதாக 7 தலீத் சமுதாயத்தினர் மீதும் வழக்குகள் பதிவாகின. இவற்றில், இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

தலைப்புச்செய்திகள்