Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இல்லை - பொதுமக்கள் ஏமாற்றம்

ஜுன் 09, 2021 05:13

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி மருந்துகள் இல்லை. கடந்த வாரம் வேலூர் மாவட்டத்திற்கு 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவை அனைத்தும் நேற்று முன்தினம் தீர்ந்துவிட்டன. தடுப்பூசிகள் இல்லாததால் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று முகாம் நடைபெற்ற இடத்தில் முன்பகுதியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இதனை அறியாமல் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதே போன்று ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட சென்ற பொது மக்களும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் 2-வது டோஸ் போட சென்ற பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்

வேலூர் மாவட்டத்திற்கு ஓரிரு நாட்களில் 20,000 தடுப்பூசிகள் வர உள்ளது. அவை வந்தவுடன் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் குறித்து பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்