Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை- பொதுமக்கள் அவதி

ஜுன் 09, 2021 06:03

புதுச்சேரி: புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கில் நேற்று பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்து கடைகளையும் மாலை 5 மணி வரை திறக்கவும், மத வழிபாட்டு தலங்களை திறக்கவும், பஸ், ஆட்டோ, டாக்சிகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

மதுபான கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டது. கடற்கரை சாலை காலை 5 முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்காக திறக்கப்பட்டது. உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று புதுவையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டது. நீண்டநாட்களாக கடைகள் பூட்டப்பட்டு கிடந்ததால் கடைகளை சுத்தப்படுத்தி காலதாமதமாக திறந்தனர். இன்னும் சிலர் நல்ல நாள் பார்த்து இன்று கடைகளை திறந்தனர்.

கொரோனா விதி முறைகளுக்கு உட்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. எல்லையோர மதுபான கடைகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மது வாங்க வந்ததால் கூட்டம் அலைமோதியது. நீண்ட நாட்களாக முடங்கிக்கிடந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்ததால் காலை முதல் சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதேநேரத்தில் ஊரடங்கு தளர்வில் பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டும், தனியார் பஸ்கள் முழுமையாக இயங்கவில்லை. 2 அரசு பஸ்கள் மட்டும் இயங்கியது. இன்று 2-வது நாளாக தனியார் பஸ்கள் முழுமையாக இயங்கவில்லை. அரசு போக்குவரத்துக்கழகத்தின் டவுன்பஸ்கள், மினி பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் புதிய பஸ்நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது.

மாலை 5 மணி வரை மட்டுமே பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டதாலும், தமிழக பகுதிக்கு பஸ்களை இயக்க முடியாததாலும், நஷ்டம் ஏற்படும் என்பதால் பஸ்களை இயக்க தனியார் உரிமையாளர்கள் முன் வரவில்லை. நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பஸ்களை பழுதுபார்க்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக கிராமபகுதிகளில் இருந்து நாள்தோறும் பஸ்களில் பயணித்து புதுவை நகர பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் பயணிகள் வருவது வாடிக்கை.

கடைகள், தொழிற்சாலைகள் இயங்க தொடங்கிய நிலையில் பஸ்களை இயக்காததால் சொந்த வாகனங்களில் பணிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெரிய தொழிற்சாலைகள் மட்டும் சொந்த வாகனங்களை பயன்படுத்தி தொழிலாளர்களை அழைத்து சென்றனர். இதனால் பொதுமக்களும், பஸ் பயணிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர். ஊரடங்கில் பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்பட்டும் மக்களிடையே இயல்வு வாழ்க்கை திரும்பாத நிலையே நிலவுகிறது.

தலைப்புச்செய்திகள்