Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கார், ரெயில் மூலம் மதுரைக்கு கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள் - போலீஸ் வேட்டையில் சிக்கியது

ஜுன் 09, 2021 06:05

மதுரை: மதுரையில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் கார் மற்றும் ரெயில்கள் மூலம் மதுபாட்டில்களை கடத்தப்பட்டு விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இந்த குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் ராஜசேகர் மேற்பார்வையில் மாநகர மதுவிலக்கு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுப்பிரமணியபுரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஒரு மாருதி காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில் 683 மதுபான பாட்டில்கள், ரூ.20 ஆயிரத்து 170 ரொக்கம் கைப்பற்றப்பட்டன. இவற்றை கடத்தியதாக முனிச்சாலை சி.எம்.ஆர். ரோடு ராதாகிருஷ்ணன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரைக்கு ரெயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. ரெயில்வே போலீசார் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் தினசரி ரெயிலில் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் இருந்து மதுரை வந்த எம்.சரவணன், முனியசாமி, எஸ்.சரவணன் ஆகிய 3 பேரிடம் இருந்து சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 88 மது பாட்டில்கள் பிடிபட்டன.

இதை கடத்தி வந்த 3 பேர் மற்றும் மதுபாட்டில்களை ரெயில்வே போலீசார் மதுவிலக்கு அமலாக்கதுறையிடம் ஒப்படைத்தனர். 

தலைப்புச்செய்திகள்