Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடி அறிவித்த இலவச தடுப்பூசி திட்டத்துக்கு உத்தவ் தாக்கரே வரவேற்பு

ஜுன் 09, 2021 06:19

மும்பை: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தேவையான தடுப்பு மருந்தை மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இதற்கு பல்வேறு மாநிலங்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளன. இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும் இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்பை வரவேற்று உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் 18 வயது முதல் 44 வயது வரை 6 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட 12 கோடி டோஸ்கள் தேவைப்படுகிறது. இதில் அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கினோம். ஆனால் போதிய மருந்து சப்ளை செய்யப்படவில்லை. இந்தநிலையில் பிரதமர் மோடி தடுப்பூசி போடும் பொறுப்பை மத்திய அரசிடம் வழங்கி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எல்லா தடைகளும் நீங்கி அனைத்து மக்களுக்கும் விரைவில் தடுப்பூசி போடப்படும் என நம்புகிறேன். இலவச தடுப்பூசி அனைவரின் உரிமை மட்டுமின்றி தேவையும் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல தனியாருக்கு கொரோனா தடுப்பூசி விற்பனை செய்ய அனுமதி வழங்கி இருப்பது குறித்து கேட்ட போது, "தடுப்பு மருந்தை இலவசமாக கொடுப்பது நல்லது தான். அதேநேரத்தில் பணம் கொடுத்து மக்கள் தடுப்பூசி போடநினைத்தால், அவர்களும் பெற்றுக்கொள்ளட்டும். முன்பு கியாஸ் மானியம் வேண்டாம் என விட்டுகொடுத்தார்கள் என்று கேள்விபட்டேன்" என்றார்.

மகாவிகாஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியதற்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்