Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகத்தில் வருகிற 14-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்வு: எடியூரப்பா அறிவிப்பு

ஜுன் 11, 2021 05:26

பெங்களூரு:  கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மே மாதம் 11-ந் தேதி 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததை அடுத்து ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு அதாவது கடந்த 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு மேலும் ஒரு வாரம் அதாவது வருகிற 14-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவைடைய இன்னும் 3 நாட்கள் உள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதில் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, தாவணகெரே, மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசன், தட்சிண கன்னட, பெங்களூரு புறநகர், மண்டியா, பெலகாவி, குடகு ஆகிய 11 மாவட்டங்களில் தற்போது உள்ள கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது வருகிற 21-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்த 11 மாவட்டங்களில் தளர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பெங்களூரு உள்பட 19 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அனைத்து தொழில் நிறுவனங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆனால் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 30 சதவீத ஊழியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை என்பதற்கு பதிலாக மதியம் 2 மணி வரை திறக்கலாம்.

அனைத்து வகையான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள முடியும். கட்டுமான பணிகளுக்கு தேவையான சிமெண்டு, இரும்பு கம்பிகள், பெயிண்டு கடைகள் உள்ளிட்டவற்றை திறக்கலாம். பூங்காக்கள் காலை 5 மணி முதல் காலை 10 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

சாலையோர வியாபாரிகள் காலை 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை வியாபாரம் செய்யலாம். ஆட்டோ-வாடகை கார்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டிரைவர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். கொரோனா தடுப்பு முழு ஊரடங்கு தினமும் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வர எந்த தடையும் இல்லை. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு வருகிற 14-ந் தேதி காலை 6 மணி முதல் 21-ந் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். கொரோனா பரவல் மேலும் குறைந்தால், அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

தலைப்புச்செய்திகள்