Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்த பஸ்கள் பறிமுதல்

ஜுன் 11, 2021 05:54

காங்கேயம்: தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில்  காங்கேயம்-சென்னிமலை சாலை பகுதியில் செயல்பட்டு வரும் தேங்காய் உலர்களத்துக்கு பீகார் மாநிலத்தில் இருந்து 63 தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு ஒரு சொகுசு பஸ் வந்தது.

அந்த சொகுசு பஸ்சை காங்கேயம் தாசில்தார் சிவகாமி தலைமையிலான வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் அதில் வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர்.

இதேபோல் தாராபுரம் சாலை பகுதியில் செயல்பட்டு வரும் தேங்காய் உலர் களத்துக்கு 42 தொழிலாளர்களையும், அகஸ்திலிங்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தேங்காய் உலர் களத்துக்கு 52 தொழிலாளர்களையும் அசாம் மாநிலத்தில் இருந்து அழைத்து வந்த 2 பஸ்களையும் வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த 3 பஸ் உரிமையாளர்கள் மீதும் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கேயம் தாசில்தார் சிவகாமி கூறுகையில், காங்கேயம் பகுதியில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் வடமாநிலத்தை  சேர்ந்தவர்கள். தற்போது கொரோனா ஊரடங்கை முன்னிட்டு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அதனை போக்குவதற்காக விதிகளுக்கு புறம்பாக தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தலைப்புச்செய்திகள்