Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விலை குறைப்புக்கு பிறகு ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் உயர்வு

ஜுன் 12, 2021 05:56

சென்னை: தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. கடந்த மாதம் 16-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது. ஆவின் பால் அட்டைதாரர்களுக்கும் விலை குறைப்பு செய்யப்பட்டது. தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைப்புக்கு பின்னர் விற்பனை அதிகரித்துள்ளது. சுமார் 2 லட்சம் லிட்டர் பால் விற்பனை உயர்ந்துள்ளது.

சென்னையில் 1 லட்சம் லிட்டரும், பிற மாவட்டங்களில் 1 லட்சம் லிட்டரும் பால் விற்பனை அதிகரித் துள்ளது. தற்போது 26 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் மொத்தம் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று காலத்தில் ஆவின் பால் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆவின் பால் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து 2 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆவின் பாலை அதிகளவில் வாங்குகிறார்கள்.

இதனை பயன்படுத்தி ஒரு சில சில்லரை விற்பனை யாளர்கள் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு ஆவின் பாலை விற்பதாக புகார்கள் வருகிறது. இதைத்தொடர்ந்து ஆவின் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்ற சில்லரை விற்பனையாளர்கள் மீது தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 50 விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 25 சில்லரை விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுதல் விலை குறித்து கட்டணமில்லா சேவை மூலம் புகார் செய்யலாம். ஆவின் பால் பாக்கெட்டில் இந்த புகார் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த கடையில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தால் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்