Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தடையை மீறி ஓட்டலில் தங்கி இருந்த 10 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

ஜுன் 12, 2021 06:16

ஊட்டி: நீலகிரி மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு இ-பதிவு அமலில் இருந்தது. இதை பயன்படுத்தி சுலபமாக பலர் நீலகிரிக்கு வந்தனர். இதற்கிடையே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர், தோல் மருத்துவ சிகிச்சைக்காக இ-பதிவு பெற்று கடந்த மாதம் குன்னூருக்கு வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு செல்லாமல், ஊட்டியில் உள்ள பிரபல சொகுசு ஓட்டலில் தங்கி இருந்தார். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் மருத்துவ சிகிச்சை முடிந்தும் சொந்த ஊருக்கு செல்லாமல் தங்கி இருப்பதும், அவருடன் அவரது குடும்பத்தினர் 3 பேர் தங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கேட்டபோது, அதில் ஒரு நபர் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வந்ததாகவும், மற்றொரு நபர் தேயிலை எஸ்டேட்டில் உள்ள தீயணைப்பு கருவிகளை பராமரிக்க வந்ததாகவும் தெரிவித்தனர். தற்போது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு முன்னதாக இ-பதிவை தவறாக பயன்படுத்தி மொத்தம் 10 சுற்றுலா பயணிகள் அந்த ஓட்டலில் தங்கி வெளியே சுற்றி வந்தது தெரியவந்தது. உடனே சுகாதார குழுவினர் வரவழைக்கப்பட்டு, அந்த 10 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறியதாவது:-

சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டும், இதை மீறி ஓட்டலில் தங்கிய 10 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை கண்காணிக்க படுவார்கள். பாதிப்பு இல்லை என்றால் அபராதம் விதிப்பதுடன், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தொற்று உறுதியானால் சிகிச்சை அளிக்கப்படும். ஓட்டலில் பணிபுரிந்து வரும் 20 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகளை தங்க வைத்த ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்