Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோடை மழையால் மின் வாரியம் நிம்மதி

ஏப்ரல் 24, 2019 06:02

தமிழகம்: தொடர் விடுமுறையை அடுத்து, கோடை மழை பெய்து வருவதால், மின் தேவை, 3,000 மெகா வாட் அளவுக்கு குறைந்துள்ளது. அதனால், மின் வாரியம் நிம்மதியாக உள்ளது.தமிழகத்தில், தினசரி மின் தேவை சராசரியாக, 14 ஆயிரம் மெகாவாட் என்றளவில் உள்ளது. இது, மார்ச் மாதம் முதல், கோடை வெயில் காரணமாக, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது. தொடர்ந்து, லோக்சபா தேர்தல் பிரசாரம், பள்ளி தேர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்மாதம், 3ல், மின் தேவை, 16 ஆயிரத்து, 151 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய சாதனை படைத்தது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, வெயில் சுட்டெரித்து வந்ததால், மின் தேவை, மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. 

மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு ஒதுக்கிய, முழு மின்சாரம் வழங்கப்படவில்லை.இதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியம் சிரமப்பட்டது. மஹாவீர் ஜெயந்தி, லோக்சபா தேர்தல், புனித வெள்ளி, வார விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தில், மின் தேவை, 14 ஆயிரம் மெகாவாட்டிற்கு கீழ் சென்றது.இந்நிலையில், பல மாவட்டங்களில், கோடை மழை பெய்து வருகிறது. தற்போது, மின் தேவை, 13 ஆயிரம் மெகா வாட்டிற்கு கீழ் சென்றுள்ளது.அதனால், சிரமம் இல்லாமல், மின் தேவையை பூர்த்தி செய்ய முடிவதால், வாரிய அதிகாரிகள் நிம்மதியாக உள்ளனர். 

தலைப்புச்செய்திகள்