Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்-மந்திரி: எடியூரப்பா பரபரப்பு பேட்டி

ஜுன் 12, 2021 06:21

ஹாசன்:  ஹாசன் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா ஹாசனுக்கு வந்தார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஹாசனுக்கு வந்தார். அவர் ஹாசன் டவுன் பூவனஹள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநிலத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்குக்காக சிறப்பு தொகுப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். அதற்காகத்தான் இன்று(நேற்று) ஹாசனுக்கு வந்துள்ளேன். மாநிலத்தில் ஹாசன் உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. கொரோனாவால் மக்கள் உயிரிழப்பதற்கு அரசு தான் காரணம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி ரேவண்ணா கூறி வருவது கண்டிக்கத்தக்கது.

அவர் பொறுப்பான மக்கள் பிரதிநிதியாக நடந்து கொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் இவ்வாறு பேசக்கூடாது. ஒரு எம்.எல்.ஏ.வாக அவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். அதைவிட்டு விட்டு தனக்கும், மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றும் பணிக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் பேசுவது சரியல்ல. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் அரசு பொய்யான தகவல்களை தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம்சாட்டுகின்றன.

கொரோனா தடுப்பு பணியில் பொய் சொல்வதால் அரசுக்கு என்ன லாபம்?. முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மீதான ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்கவில்லை. தேவேகவுடா விரும்பியபடி ஹாசனில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடுத்த 2 ஆண்டுகளும் நான் தான் முதல்-மந்திரியாக இருப்பேன். நான் தான் முதல்-மந்திரியாக இருந்து மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவேன். பா.ஜனதா மேலிட தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளும் என் மீதுநம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது எனது கடமை. கர்நாடக மாநிலத்தை அனைத்து ரீதியிலும் வளர்ச்சி அடைய வைப்பேன். மாநிலத்தை நல்லபடியாக வழிநடத்துவேன். நல்ல முறையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன்.

முதல்-மந்திரி பதவியில் இருந்து என்னை மாற்றி விடுவார்கள் என்று பலரும் கூறி வந்த நிலையில் கர்நாடக மேலிட பா.ஜனதா பொறுப்பாளரான அருண் சிங், எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து மாற்றும் திட்டம் இல்லை என்று கூறியது எனக்கு 100 சதவீத பலத்தை கொடுத்தது.

இதனால் அடுத்த 2 ஆண்டுகளில் முதல்-மந்திரி பதவியில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. தற்போது எனது பொறுப்பு இன்னும் அதிகமாகி உள்ளது. என் மீது மோடி, அமித்ஷா ஆகியோர் வைத்துள்ள அன்பு, நம்பிக்கை ஆகியவற்றை காப்பாற்றி நேர்மையுடன் செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் கடுமையாக உழைப்பேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்