Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா? - சுகாதார அமைச்சகமும் மறுப்பு

ஜுன் 12, 2021 06:45

புதுடெல்லி:கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் கசியவிடப்பட்டதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வேக்சின் போட்டுக்கொள்வதற்காக கோவின் (CoWin) தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவின் இணைய தளம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்தன. அதில் உள்ள மக்களின் விவரங்கள் வெளியில் கசியவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுவரை பல கோடி மக்கள் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்களின் தகவல் அனைத்தும் பொது வெளியில் கசிந்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் உலவின. அதோடு மக்களின் இருப்பிடம், ஜிபிஎஸ் லோகேஷன் போன்றவையும் கசிந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டன. கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் கசியவிடப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த தகவல் முழுக்க முழுக்க தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ளதாவது:

கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் கசியவிடப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. தரவுக் கசிவு தொடர்பான வெளிப்படையாக தெரியாத ஹேக்கர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளவர்கள் வெளியிடும் தகவல் ஆதாரமற்றது. மத்திய சுகாதார அமைச்சகமும், தடுப்பூசி நிர்வாகத்தின் அதிகாரம் பெற்ற குழுவின் தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கோவின் தளத்தை ஹேக்கிங் செய்ததாகக் கூறப்படும் விஷயத்தை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கணினி அவசரநிலை செயற்குழு தற்போது விசாரணை செய்துள்ளது. ஹேக்கர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் கூற்றுக்களான - கோ-வின் முறையை ஹேக்கிங் செய்ததாகக் கூறப்படுவதும் மற்றும் தரவு கசிவு தொடர்பானதும் அடிப்படையற்றது.

கோவின் தளத்தில் மக்களின் தரவு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்று தடுப்பூசி நிர்வாகத்திற்கான அதிகாரம் பெற்ற குழுவின் (ஈ.ஜி.வி.ஏ.சி) தலைவர் டாக்டர் ஆர்.எஸ். சர்மா தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்