Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜார்கண்டில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

ஜுன் 14, 2021 10:58

ஜம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் பிப்லா அணைக்கட்டு அமைந்திருக்கிறது. இந்த அணைக்கட்டின் உள்பகுதியில் நேற்று கிராமத்தினர் சிலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் 65 வயதான ஒரு மூதாட்டியும், 3 சிறுவர்களும் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
 
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் 4 பேரும் வரும் வழியே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறந்தவர்களில் இருவர் சகோதரர்கள் ஆவர். மின்சாரம் தாக்கியதில் ஒரு மாடும் இறந்தது. மற்றொருவர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்துவிட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பழுதடைந்த மின்கம்பிகளை சரிசெய்யும்படி பலமுறை கூறியும் மின்சார வாரியம் அலட்சியமாக இருந்தது என்று அவர்கள் புகார் கூறினர். சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராமத்தினர் வலியுறுத்தினர்.

அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்ததால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.
 

தலைப்புச்செய்திகள்