Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யூரோ கால்பந்து தொடர்: ரஷ்யாவை வீழ்த்தியது பெல்ஜியம்

ஜுன் 14, 2021 11:39

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: யூரோ கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ரஷ்யா - பெல்ஜியம் அணிகள் நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மோதின. 10-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் லியாண்டர் டெண்டன்கர் பாக்ஸ் பகுதிக்குள் அடித்த பந்தை ரஷ்யாவின் டிபன்டரான ஆண்ட்ரி செமியோனோவ் தடுக்கத் தவறினார்.

அப்போது அருகில் நின்ற லூகாகு விரைவாக செயல்பட்டு பந்தை கோல் வலைக்குள் செலுத்த பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது. 34-வது நிமிடத்தில் பெல்ஜியம் 2-வது கோலை அடித்தது. தோர்கன் ஹஸார்டு இலக்கை நோக்கி அடித்த பந்தை ரஷ்ய அணியின் கோல்கீப்பர் அன்டன் ஷுனின் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் அவர் மீது பட்டு திரும்பிய பந்தை தாமஸ் மியூனியர் கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

2-வது பாதி ஆட்டத்தில் ரஷ்யஅணி கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 88-வது நிமிடத்தில் தாமஸ் மியூனியரிடம் இருந்து பந்தை பெற்ற லூகாகு அருமையாக கடத்திச் சென்று கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் 3-0 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் மேற்கொண்டு கோல்ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

லண்டன் நகரில் ‘டி’ பிரிவில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 57-வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் கோல் அடித்து அசத்தினார்.

தலைப்புச்செய்திகள்