Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காமராஜ் பல்கலைகழக துணைவேந்தரிடம் தனியார் கல்லூரி நிர்வாகிகள் மனு

ஏப்ரல் 24, 2019 07:05

மதுரை: மாணவர் மற்றும் ஆசிரியர் நலன் கருதி யு.ஜி.சி., விதிப்படி முழு தகுதி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க ஐந்து ஆண்டு அவகாசம் வழங்க கோரி காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரிகள் நிர்வாகிகள் சங்கம் சார்பில் துணைவேந்தர் கிருஷ்ணனிடம் மனு அளிக்கப்பட்டது. 

மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரிகள் நிர்வாகிகள் சங்கம் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜகோபால், பொருளாளர் மாரீஸ்குமார், இணை செயலாளர்கள் தவமணி கிறிஸ்டோபர், பிரபாகரன், தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் கழகத் தலைவர் அஜித்குமார், பொதுச் செயலாளர் நித்தியானந்தம், பொருளாளர் சேதுபதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

அப்போது, 'பல்கலைக்கு உட்பட்ட இணைவிப்பு மற்றும் சுயநிதி பிரிவு கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர் பிஎச்.டி., அல்லது நெட்/செட் தகுதி பெற்றவர் விபரம் ஏப்.,31 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்' என பதிவாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.இதன்படி, சுயநிதி பிரிவு கல்லுாரிகளில் 75 சதவீதம் பேர் பிஎச்.டி., அல்லது நெட்/செட் பெறாத நிலையில் உள்ளனர்.  

உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் கல்லுாரிகள் முடங்கி, மாணவர் நலன் பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.மேலும் பல்கலை உறுப்பு கல்லுாரிகளிலேயே 50 சதவீதம் ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி., கோரிய முழு தகுதி இல்லை. முழு தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்கவும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர் முழு தகுதி பெறும் வகையிலும் கல்லுாரிகளுக்கு ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும்' என துணைவேந்தரிடம் வலியுறுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மதுரை பாத்திமா, அமெரிக்கன், சேர்மத்தாய் வாசன், மன்னர் திருமலை நாயக்கர், மங்கையர்கரசி, திண்டுக்கல் ஸ்ரீவீ, சிவகாசி காளீஸ்வரி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கல்லுாரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்