Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

ஜுன் 15, 2021 11:40

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு அங்கு நோய் தொற்று வேகமாக பரவ தொடங்கியது. மக்கள் தொகை நெருக்கம் காரணமாக அங்கு வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்துவது சவலானதாக இருக்கும் என கருதப்பட்டது.

ஆனாலும் அங்கு ஜூலை மாதத்திற்கு பிறகு நோய் பரவல் குறைந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பெரும்பாலான நாட்கள் அங்கு பாதிப்பு ஒற்றை இலக்கங்களில் தான் இருந்தது. இந்தநிலையில் கொரோனா 2-வது அலை தாராவியை மீண்டும் புரட்டிப்போட்டது. ஏப்ரல் மாதம் 8-ந் தேதி அதிகப்பட்சமாக ஒரே நாளில் 99 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் மே மாத கடைசியில் தாராவியில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த 2 வாரமாக ஒற்றை இலக்கங்களில் தான் பாதிப்பு இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று தாராவியில் ஒருவருக்குகூட பாதிப்பு கண்டறியப்படவில்லை. கடந்த பிப்ரவரி 2-ந் தேதிக்கு பிறகு தற்போது தான் அங்கு பூஜ்ஜியம் பாதிப்பு பதிவாகி உள்ளது. இது உழைக்கும் வர்க்கமான தாராவி மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்து உள்ளது.

தலைப்புச்செய்திகள்